முகப்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள் குவாலயபீட யானையைக் கொல்லல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள்

PostHeaderIcon குவாலயபீட யானையைக் கொல்லல்

கம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாலும் அதற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் கொல்வதுதான் கம்சனின் திட்டம். எனவே அவன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மல்யுத்தப் போட்டி ஒன்றிற்கான ஏற்பாட்டைச் செய்தான். மல்யுத்தக் களம் நேர்த்தியாகத் துப்பரவு செய்யப்பட்டு கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. போட்டி நடக்கவிருந்ததைப் பறையடித்து அறிவித்தார்கள். அரசர்கள், பிராமணர்கள், சத்திரியர்கள் என்று பல் வேறான உயர் பிரிவினருக்குத் தனியான ஆசனங்கள் அமைக்கப் பட்டிருந்தன.

இறுதியில் கம்சன் வந்து சேர்ந்தான். அவனுடன் பல மந்திரிகளும், பிரதானிகளும், காரியஸ்தர்களும் வந்து அமர்ந்தார்கள். கம்சன் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தான். எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறியபின் சபையின் முன் தம் திறமைகளைக் காட்ட வந்திருந்த மல்லர்கள் கோதாவுக்குள் இறங்கினார்கள். அவர்கள் பிரகாசமான ஆபரணங்களையும், ஆடைகளையும் அணிந்திருந்தார்கள். அவர்களுள் பிரசித்தி பெற்ற மல்லர்களான சாணூரன், முஷ்டிகன், சாலன், கூடன், தோசாலன் ஆகியவர்களும் இருந்தனர்.

நந்தரின் தலைமையில் வந்திருந்த ஆயர் குல மக்களையெல்லாம் கம்சன் வரவேற்றான். அவர்களும் தாங்கள் கொண்டு வந்திருந்த பால் பண்டங்களைக் கம்சனுக்குப் பரிசாக அளித்துத் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தார்கள். காலையில் நீராடி, மற்றக் காலைக் கடன்களை முடித்துவிட்டுக் கிருஷ்ணரும் பலராமரும் தயாராக இருந்தபோது மல்யுத்தக் களத்தில் ஒலித்த பறைகளின் ஓசை அவர்களின் காதில் விழுந்தது. உடனே வேடிக்கை பார்க்க அவ்விடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

மல்யுத்தக் களத்தை அவர்கள் அடைந்தபோது அங்குள்ள வாயிலில் குவாலயபீட என்ற மாபெரும் யானையொன்று நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டார்கள். பணியாட்கள் யானையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். வழியை மறைக்கும்படியாக வேண்டுமென்றே காவலர்கள் யானையை நிறுத்தியிருந்ததைக் கிருஷ்ணர் கண்டார். காவலர்களின் நோக்கத்தை உணர்ந்த கிருஷ்ணர் யானையைத் தாக்குவதற்கு முன்பாகத் தம் உடைகளை இறுக்கிக் கொண்டார். பின், மேகம் போல் கர்ஜிக்கும் குரலில் யானையின் காவலனிடம் கிருஷ்ணர் பேசினார்: கயவனே, வழியை மறித்தால் உன்னையும் உன் யானையையும் யமலோகம் அனுப்புவேன்.

கிருஷ்ணரால் அவமதிக்கப்பட்ட காவலன் கோபமடைந்து ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அவரைத் தாக்கும்படி யானையை ஏவினர். யானை கிருஷ்ணரை நோக்கி முன்னேறியது. அவரை நோக்கி விரைந்து வந்து துதிக்கையால் அவரைப் பிடிக்க முயற்சித்தது. ஆனால் கிருஷ்ணர் வெகு சாமர்த்தியமாக யானையின் பின்பக்கம் சென்று தப்பித்துக் கொண்டார். தன் துதிக்கைக்கு அப்பால் பார்க்க முடியாத யானையால் பின்பக்கம் ஒளிந்திருந்த கிருஷ்ணரைக் காணமுடியவில்லை. என்றாலும் அவரைப் பிடிக்கும் நோக்கத்துடன் துதிக்கையால் துளாவியது. மீண்டும் கிருஷ்ணர் விரைவாக இடம்மாறி யானையின் பிடியிலிருந்து தப்பினார். இம்முறை அவர் யானையின் வாலைப் பிடித்து இழுத்தார்.

மிகுந்த பலத்துடன் இழுத்ததால் கருடன் பாம்பை இழுத்துச் செல்வதுபோல் கிருஷ்ணர் யானையைச் சிறிது தூரம் இழுத்துச் சென்றார். கிருஷ்ணர் சிறு வயதில் கன்றுகளை வாலைப் பிடித்து இழுத்தது போல் யானையையும் வாலைப் பிடித்து அப்படியும் இப்படியுமாக இழுத்தார். அதன்பின் அவர் யானையின் முன்புறம் சென்று அதன் தாடையில் பலமாக அடித்தார். அடித்தபின் அவர் மீண்டும் யானையின் பார்வையிலிருந்து மறைந்து அதன் பின்புறமாகச் சென்று, கீழே குனிந்து, அதன் கால்களிடையே புகுந்து அதைத் தடுமாறி விழச் செய்தார்.

அவ்வாறு செய்துவிட்டுக் கிருஷ்ணர் உடனே விலகிக் கொண்டார். அவர் கீழேயே இருப்பதாக எண்ணிய யானை அவரைக் கொல்லும் நோக்கத்துடன் கொம்பை அவர்மீது பாய்ச்சியதாக எண்ணிக்கொண்டு தரையில் ஆழமாகச் செலுத்தியது. யானை மிகவும் அலைக்களிந்து கோபமுற்றிருந்தாலும் அதன் பாகன் அதை மேலும் விரட்டினான். யானை மதம் கொண்டு கிருஷ்ணரை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தது.

கிருஷ்ணர் யானையின் துதிக்கையைப் பிடித்து இழுத்தார். யானையும் பாகனும் கீழே விழுந்தபோது கிருஷ்ணர் யானையின் மீது தாவிக் குதித்து ஏறி, யானையையும் பாகனையும் கொன்றார். யானையைக் கொன்ற பின் கிருஷ்ணர் அதன் தந்தத்தை எடுத்துத் தன் தோளின் மேல் வைத்துக் கொண்டார். வியர்வைத் துளிகளும் யானையின் இரத்தத் துளிகளும் அவரின் மேனியை அழகு செய்ய, கிருஷ்ணர் ஆனந்த மயமாகக் காட்சியளித்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.