முகப்பு ஸ்ரீல பிரபுபாதா

PostHeaderIcon ஸ்ரீல பிரபுபாதா

ஸ்ரீல பிரபுபாதா

 

 

தெய்வத்திரு அ.ச. பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதா

(அகில உலக கிருஷ்ண பக்திக் கழக ஸ்தாபக ஆச்சாரியார்)

 

ஸ்ரீல பிரபுபாதா 1896 -ம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதி இந்தியாவின் கலகத்தாவில் பிறந்தார். அப்போது அவருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் அபய சரண்தே என்பதாகும். அவருடைய தந்தை பெயர் கௌர்மோகன், தாய் பெயர் ரஜனி. அபய் சிறுவயதாக இருக்குப்போது வருடா வருடம் கல்கத்தாவில் நடைபெறும் ஸ்ரீ ஜெகந்நாதரின் ரதயாத்திரை உற்சவம் அவரது மனதைக் கவர்ந்தது. அபய் தானே ஒரு சிறிய ரதம் ஒன்றை செய்து அதில் சிறிய ஜகந்நாத், பலதேவ் சுபத்ராவை வைத்து ரதயாத்திரையை தந்தை,  மற்றும் அயலவரின் உதவியுடன் 1901 -ம் ஆண்டு நடத்தினார்.


அவர் தமது ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமியை முதன் முதலாக 1922 -ம் ஆண்டில் சந்தித்தார். பிரசித்தி பெற்ற சமய அறிஞரும், 64 கௌடிய மடங்களை நிறுவியருமான ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதிக்கு புலமை மிக்க வாலிபனான அபய சரன்தேவை முதலாவது சந்திப்பிலேயே மிகவும் பிடித்திருந்தது. ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபுவின் போதனைகளை உலகமெங்கும் ஆங்கிலத்திலே பிரச்சாரம் செய்யுமாறு பக்திசிதாந்தா அபயை கேட்டுக்கொண்டார். அன்றிலிருந்தே அவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார். பின் அலகாபாத்தில் 1933 -ம் ஆண்டு அபய் பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூராவிடம் தீட்சை பெற்று சிஷ்யரானார்.  1938 -ம் ஆண்டு தமது ஆன்மீக குருவின் கட்டளைக்கேற்ப பகவத் கீதையை மொழிபெயர்க்க ஆரம்பித்ததுடன் கௌடிய மடத்தின் பிரசாரத்திற்கு உறுதுணையாகவும் இருந்தார்.


1944 -ம் ஆண்டில் தனி மனிதராக BACK  TO  GODHEAD எனும் மாதம் இருமுறை வெளியாகும் ஆங்கில சஞ்சிகையைத் தொடங்கினார். அவரே அதை பதிப்பிற்குத் தயார் செய்தார். கையெழுத்துப் பிரதிகளை "டைப்" அடித்து, பிழைதிருத்தமும் செய்தார். பிறகு ஒவ்வொரு பிரதிகளையும் அவரே விநியோகித்தார். பிரசுரத்தை தொடர்ந்து நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டார். ஆரப்பிக்கப்பட்ட சஞ்சிகை ஒருபோதும் நின்றுவிடவில்லை. அது இப்போது உலகெங்கும் உள்ள அவரது சீடர்களால் தொடரப்பட்டு 45 மொழிகளில் பிரசுரிக்கப்படுகிறது.
ஸ்ரீல பிரபுபாதாவினுடைய தத்துவ ஞானத்தையும், ஆழ்ந்த பக்தியையும் அறிந்து, 1947 -ல் கௌடிய வைஷ்ணவ சமூகம் அவருக்கு "பக்தி வேதாந்தா" எனும் பட்டத்தை அளித்துக் கௌரவித்தது. 1950 -ல் தனது ஐம்பத்து நான்காவது வயதில், ஸ்ரீல பிரபுபாதா படிப்பதற்கும் எழுதுவதற்கும் அதிக நேரத்தை அர்ப்பணிப்பதற்காக வானபிரஸ்த வாழ்வை ஏற்று இல்லற வாழ்விலிருந்து ஓய்வு பெற்றார். பின் புனித நகரான பிருந்தாவனத்திற்கு சென்று, சரித்திரப் புகழ்பெற்ற ஸ்ரீ ராதா தாமோதரர் ஆலயத்தில் மிகவும் எளிமையான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தார்.


அங்கு அவர் பல ஆண்டுகளாக ஆழ்ந்த படிப்பிலும், எழுத்திலும் ஈடுபட்டு வந்தார். 1959 -ல் அவர் துறவறம் (சந்நியாசம்) ஏற்றார். அதன்பின் அவருடைய பெயர் அபய சரணாரவிந்த பக்தி வேதாந்த சுவாமி என்று மாறியது. ஸ்ரீ ராதா தாமோதரர் ஆலயத்தில் ஸ்ரீமத் பாகவதத்தை மொழிபெயர்த்து, அதற்கு உரை எழுதும் பணியான அவரது மிகச் சிறந்த சாதனையை செயற்படுத்தத் தொடங்கினார். 1960 -ல் விநோதமான விண்வெளிப் பயணம் எனும் முதல் புத்தகத்தை வெளியிட்டார். பிற்காலத்தில் ஸ்ரீல பிரபுபாதா அறுபதுக்கும் மேலான அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்புக்களையும் விரிவுரைகளையும் எழுதியதுடன், இந்தியாவின் தத்துவங்களையும், இலக்கியங்களையும் கூட சுருக்கமாக எழுதி வெளியிட்டார்.


அமெரிக்கா சென்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய போதனைகளை, அமெரிக்க மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டுமென்ற தமது ஆன்மீக குருவின் வேண்டுகோளுக்கிணங்க தனது 69 வது வயதில் அமெரிக்கா செல்வதற்காக ஸிந்தியா கப்பல் கம்பனியிடம் இலவச பிரயாணச் சீட்டைப் பெற்றார். கல்கத்தாவிலிருந்து ஜலதூதா என்ற கப்பலில் ஸ்ரீல பிரபுபாதா ஆகஸ்ட் 13 ஆம் தேதி 1965 -ம் வருடம் அமெரிக்காவிற்கு புறப்பட்டார். 35 நாள் நீண்ட கடல் பிரயாணத்தின் பின் 1965 செப்டம்பர் 17 -ல் அமெரிக்காவின் போஸ்டன் துறைமுகத்தை வந்தடைந்தார்.  பிரபுபாதா முதன் முதலாக நியூயார்க் நகரத்திற்கு வந்திறங்கியபோது அவரிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே செலவுக்காக இருந்தது. கிட்டத்தட்ட ஓராண்டு கால பெருங் கண்டத்திற்குப் பிறகுதான், 1966 -ம் ஆண்டு ஜுலை மாதத்தில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) (International Society for Krishna Consciousness)  அவர் ஸ்தாபித்தார். 1977 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 14 -ம் திகதியன்று மகா சமாதி அடையுமுன், இயக்கத்தை நன்கு வழிநடத்திச் சென்ற ஸ்ரீல பிரபுபாதா உலகம் முமுவதிலும் நூற்றுக்கும் மேலான "இஸ்கான்" ஆசிரமங்கள், கல்வி நிலையங்கள், ஆலயங்கள், ஸ்தாபனங்கள் மற்றும் விவசாயப் பண்ணைகள் போன்றவை வளர்ந்து வருவதைக் கண்டார்.


1968 -ல் வெஸ்ட் வர்ஜீனியாவின் மலைப் பிரதேசத்தில், நியூ பிருந்தாவன் நகரை (புதிய பிருந்தாவனம்) என்ற பெயரில், மாதிரி வேதப் பண்பாட்டுச் சமுதாயம் ஒன்றைப் படைத்தார் ஸ்ரீல பிரபுபாதா. இப்போது பல்லாயிரம் ஏக்கர்களுக்கு மேற்பட்ட வெற்றிகரமான பண்ணைச் சமூகமாக வளர்ந்துவிட்ட இந்த வெற்றிகரமான முயற்சியினால் ஊக்குவிக்கப்பட்டு, அவரது சீடர்களில் பலர் இது போன்ற சமுதாயங்களை உலகின் பல பாகங்களிலும் தொடக்கி வெற்றியும் அடைந்து வருகின்றனர்.


1972 -ல் அமெரிக்காவிலுள்ள டால்லஸ், டெக்ஜஜ் என்னுமிடத்தில், வேத முறையிலான ஆரப்ப மற்றும் இடைநிலைக் கல்விகளை ஸ்ரீல பிரபுபாதா அறிமுகப்படுத்தினார். பிறகு அவரது கண்காணிப்பின் கீழ், அவரது சீடர்கள் அமெரிக்காவிலும் மற்ற உலக நாடுகளிலும் குருகுல பள்ளிக்கூடங்களை நிறுவியுள்ளனர். உலகெங்கிலும் இயங்கிவரும் இப்பள்ளிகளின் தலைமைக் கேந்திரம் இந்தியாவில், பிருந்தாவனத்தில் (வட மதுரைக்கருகே) நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் சில மிகப் பெரிய சர்வதேச கலாச்சார மையங்களை நிறுவுவதற்கும் ஸ்ரீல பிரபுபாதா தம் சீடர்களுக்கு ஊக்கமளித்தார். மேற்கு வங்காளத்தில்லுள்ள ஸ்ரீதாம மாயாப்பூர் என்ற இடத்திலுள்ள "இஸ்கான்" மையம், பிருந்தாவனத்திலுள்ள கிருஷ்ண பலராம் ஆலயமும், சர்வதேச விருந்தினர் மாளிகை மற்றும் இந்தியாவின் முக்கிய பெரிய நகரங்களிலும் பல "இஸ்கான்" மையங்கள் உள்ளன.


ஸ்ரீல பிபுபாதாவின் சீரிய தொண்டுகள் எண்ணற்றவை. அவற்றில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது அவரது நூல்களாகும். அவை அதிகாரப் பூர்வமானவையாகவும், ஆழ்ந்த புலமை உடையவையாகவும், தெளிவு உடையவையாகவும் விளங்குவதால், உலக அறிஞர்களுக்கிடையே உயர்வாக மதிக்கப்படுகின்றன. மேலும் அநேக கல்லூரி பாடத்திட்டங்களிலும் அவை மாதிரி பாடநூல்களாகவும் உபயோகிக்கப்படுகின்றன. அவரது நூல்கள் 80 -ற்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. 1972 -ல் நிறுவப்பட்ட பக்தி வேதாந்த புத்தக நிறுவனம், ஸ்ரீல பிரபுபாதாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே நிறுவப்பட்டதாகும். இந்த நிறுவனம், இந்தியாவின் சமய மற்றும் த்துவ நூல்களை வெளியிடும் ஸ்தாபனங்களுக்கிடையில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்றது.


வயதான பருவத்திலும், ஸ்ரீல பிரபுபாதா பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் பூமியை பதினான்கு முறை சுற்றியிருக்கிறார். பிரச்சாரம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றுப் பிரயாணம் அவரை ஆறு கண்டங்களுக்கு அழைத்துச் சென்றது. இத்தகைய சுறுசுறுப்பான செயற் திட்டத்திற்கிடையிலும் ஸ்ரீல பிரபுபாதா அபரிமிமதமாக எழுதிக்கொண்டே இருந்தார். அவரது நூல்கள் வேத தத்துவம், சமயம், இலக்கியம் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் கொண்ட ஓர் ஒப்பற்ற நூலகமாக விளங்குகிறது.